புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத தொடர் மழை காரணமாக மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் முழுமையாக வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோர பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மும்பை, புனே, தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில்வே பாதைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனே நகரில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மின்சாரம் தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, ராணுவம், விமானப்படை மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.