மோசடிகளை தடுக்க தேர்வு முறையில் மாற்றம்: யுபிஎஸ்சி நடவடிக்கை


புதுடெல்லி: போட்டித் தேர்வுகளில் சமீபத்திய மோசடி சம்பவங்களை தொடர்ந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தனது தேர்வு முறையில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

நிகழாண்டு மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு சர்ச்சை காரணமாக அத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ), உச்ச நீதிமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதேபோல், சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் விவகாரம் பூதாகரமாகி அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்க யுபிஎஸ்சி தனது தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஆதார் அடிப்படையிலான கைரேகை சரிபார்ப்பு, விண்ணப்பதாரர்களின் முக அங்கீகாரம் போன்ற நடவடிக்கைகளை இணைத்து நடைமுறைகளை நவீனப்படுத்த யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வின் போது மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சிசிடிவி கண்காணிப்பு மற்றும் 'கியூஆர் கோட்'-ஐ ஸ்கேன் செய்யும் முறையிலான மின்னணு அனுமதி அட்டை ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. யுபிஎஸ்சி ஓராண்டில் 14 தேர்வுகளை நடத்துகிறது. இதில் சிவில் சர்வீஸ் தேர்வுகள், பல ஆட்சேர்ப்பு தேர்வுகள், மத்திய அரசின் உயர்மட்ட பதவிகளுக்கான நேர்காணல்கள் ஆகியவையும் அடங்கும்.

யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் போது தொழில்நுட்ப சேவைகளை வழங்க பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஏலங்களை கோரியுள்ளது. ஏலதாரர் கடந்த 3 நிதியாண்டுகளில் தேர்வு அடிப்படையிலான திட்டங்களில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறும் இடங்களின் பட்டியல் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப சேவை வழங்குநர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x