நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: கர்நாடகா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்


பெங்களூரு: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப் பேரவையில் அம்மாநில காங்கிரஸ் அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆகியவற்றுக்கு எதிராக பாஜக, ஜேடி(எஸ்) உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அம்மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தொடர்ந்து அவையில் அவர் பேசுகையில், “இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்றும், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு முன்வைத்த முன்மொழிவு அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது" என்றார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் யு.டி.காதர், அவையில் குரல் வாக்கெடுப்பு கோரினார். பின்னர் பெரும்பான்மை வாக்குகளுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதேபோல், மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வை வாபஸ் பெறவும், மாநில அரசுகள் தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்கவும் இந்திய அரசை ஒருமனதாக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நாம் செய்வது எதிர்காலத்திற்கானது. நாடாளுமன்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

நீட் தேர்வு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஆதரிக்கப்படுகிறது. எனவே அதை மாற்ற வேண்டும் என்றால் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். எனவே, நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என்றார்.

நீட் தேர்வுக்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. அதே நேரத்தில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இத்தேர்வை ரத்து செய்ய மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

x