டெல்லி: நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் 3.17 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள். நாடு முழுவதும் சுமார் 2.76 கோடி சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. இதன் மூலம் 18.16 கோடி தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் உத்யம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் தங்களை பதிவு செய்து கொள்வதோடு, அவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தங்களது கோரிக்கைகளையும் முன்வைக்க முடியும்.
இதனிடையே இன்று மத்திய அரசு சார்பில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வமான பதில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 49,342 சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 லட்சத்து 17 ஆயிரத்து 641 பேர் வேலை இழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 12,233 சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் கடந்த 4 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளது. இதனால் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 27 லட்சம் தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், இதன் மூலம் 2 கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் 6,298 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 26 லட்சம் தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், 1.68 கோடி பேர் பணியாற்றுகின்றனர். அங்கு 3,425 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் 33 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த தகவல், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.