நடிகை கங்கனா ரணாவத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: மண்டி தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு!


சிம்லா: இமாச்சல பிரதேச மநிலம், மண்டி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்கில், அத்தொகுதியின் எம்பி-யான நடிகை கங்கனா ரணாவத்துக்கு நோட்டீஸ் அனுப்ப அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை கங்கனா ரணாவத். இந்நிலையில் இவரது வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியின் கின்னவுர் பகுதியைச் சேர்ந்த லயக் ராம் நேகி என்பவர் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். லயக் ராம் நேகி தனது மனுவில், "மண்டி தொகுதியில் போட்டியிட நான் மனுத்தாக்கல் செய்தேன். ஆனால் எனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி தவறாக நிராகரித்தார்.

வனத்துறை முன்னாள் ஊழியரான நான், முன்கூட்டிய ஓய்வு பெற்றுவிட்டேன். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுக்களுடன், நிலுவையில்லா சான்றுகளையும் வழங்கினேன். எனினும், மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகிய துறைகளில் இருந்து, 'நிலுவை இல்லா' சான்றிதழை சமர்ப்பிக்க எனக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.

அந்த சான்றிதழ்களை நான் சமர்ப்பித்தபோது, தேர்தல் நடத்தும் அலுவலர் அவற்றை ஏற்காமல், எனது வேட்புமனுவை நிராகரித்தார். தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்.

எனவே, மண்டி தொகுதியில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ரேவால், இது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கங்கனா ரணாவத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

x