கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பாக அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் இன்று நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக கோயில் வளாகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப் போது, சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்ன்ர் ஜன. 22-ல் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதி நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். கோகுல்ராஜ் சுவாதியுடன் கோயிலுக்குள் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. கோயிலில் இருந்து வெளியே வரும் காட்சிகளும் இருந்தன. ஆனால் யுவராஜ் தரப்பினர் கோயிலுக்குள் சென்று பின்னர் வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை. எனவே கோயில் இருந்து கோகுல்ராஜ் எந்த வழியில் வெளியேறினார் என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையாளர் இருந்த சூரிய நாராயணன், சிசிடிவி காட்சிகள் பதிவான ஹாட்டிஸ்க்சை போலீஸாரிடம் ஒப்படைத்த பணியாளர் தங்கவேல், நீதிபதிகள் சிசிவிடி ஆதாரம் தொடர்பாக கேட்டு அறிந்தனர். கோகுல்ராஜ் மற்றும் சுவாதி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடங்களைப் பார்வையிட்டு அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களையும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆய்வு செய்தனர்.
இதன் காரணமாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் எஸ்பி, டிஎஸ்பி என 200 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் உயிரிழந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் கோகுல்ராஜ், யுவராஜ் தர்ப்பு வழக்கறிஞர்களும் வருகை தந்திருந்தனர். கோயிலில் நேரடியாக நீதிபதிகள் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.