ஒற்றைத் தலைவலி! இயற்கை வழியில் தீர்ப்பது எப்படி?


மக்களின் தலையாய உபாதைகளில் ஒன்றாக படுத்தியெடுப்பது தலைவலி. தினத்துக்கு ஒரு முறையேனும் அழையா விருந்தாளியாக வந்து செல்லும் தலைவலியை வேறுவழியின்றி சகித்து வாழ்வோர் நம்மில் அதிகம். தலைவலியை விரட்ட இயற்கை வாழ்வியல் மற்றும் மருத்துவம் காட்டும் வழிகளை பின்பற்றி எளிதில் நிவாரணம் பெறலாம்.

தலை ஒன்று; வலிகள் பல

ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, சைனஸ் தலைவலி, நரம்பு மற்றும் அதிக இரத்த ஓட்டம் தொடர்பான கிளஸ்டர் தலைவலி... என ஒற்றைத் தலையை குறிவைக்கும் வலிகள் பல. தலைவலி எதுவானாலும் அதற்கான முதன்மையான காரணங்களில், தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவையே முக்கிய இடம் வகிக்கின்றன. மலச்சிக்கல் கண்டவர்கள் மற்றும் போதுமான நீர் அருந்தாததால் உடலில் நீரேற்றம் குறைந்தவர்களும் தலைவலிகளுக்கு ஆளாவார்கள். இவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

தூண்டல்களை கண்டறிந்து துண்டிக்கவும்

மைக்ரேன் தலைவலி எனப்படும் ஒற்றைத் தலைவலி கண்டவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை தெரியும். மைக்ரேன் தலைவலியை குணப்படுத்துவதைவிட முன்கூட்டியே அவற்றை தவிர்க்க முயற்சிப்பதே சமயோசிதமானது. இந்த வகையில் ஒற்றைத் தலைவலியை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபட வேண்டும்.

இந்த தூண்டல் காரணிகள் ஆளாளுக்கு வேறுபடவும் செய்யலாம். வாசனைபொருட்களை நுகரும்போது, கண் கூசும் சூரிய வெளிச்சம் முதல் செயற்கை வெளிச்சம் வரை அதிகம் நேரம் இருப்பது ஆகியவற்றால் சிலருக்கு எளிதில் தலைவலி தூண்டல் பெறும். ஒற்றைத் தலைவலி கண்டவர்களுக்கு வழக்கமான சிரமங்களுடன், வாந்தி மற்றும் வாந்திக்கான குமட்டல்கள் தென்படும்.

செயற்கை வெளிச்சத்தில் புழங்கும்போது அந்த வெளிச்சம் கண்களை நேரடியாக பாதிக்காத வகையில் அமைத்துக்கொள்வது, கண் கூசும் வெளிச்சத்தை தவிர்ப்பது, இயன்றவரை இயற்கையான வெளிச்சத்தில் புழங்குவது போன்றவை வெளிச்சம் காரணமாக தலைவலி தூண்டப்பெறுவதை தவிர்க்க உதவும்.

சுவைக்காக உணவில் சேர்க்கப்படும், மோனோ சோடியம் குளூட்டாமேட் உள்ளிட்ட உப்புக்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் தலைவலியை தூண்ட வாய்ப்பாகின்றன. நைட்ரேட் சேர்ந்த பேக்கரி தயாரிப்புகளும் சிலருக்கு தலைவலியை தூண்டச் செய்யும். இன்னும் பலருக்கு ஐஸ்க்ரீம், மென்பானங்கள் என சில்லிடச் செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வதால் தலைவலி முளைக்கும். இந்த வரிசையில் பதப்படுத்திய உணவுகள், ஊறுகாய் போன்றவையும் வேறு சிலருக்கு பால் பொருட்களாலும் கூட தலைவலி தூண்டலாகும். எனவே தனிநபர் சார்ந்தும் தலைவலியை தூண்டச் செய்யும் உணவுகளை அடையாளம் கண்டு தவிர்ப்பது நல்லது.

ஆயில் முதல் அக்குபங்சர் வரை

அடுத்தபடியாக படுத்தும் தலைவலியிலிருந்து படிப்படியாக விடுபட, இதர இயற்கை உபாயங்களை நாடலாம். தேங்காய் எண்ணெயில் கலந்த லேவண்டர் ஆயிலை படுக்கும் முன்னராக தடவிக்கொள்வது அவற்றில் ஒன்று. மைக்ரேன் தலைவலி அறிகுறிகளின் தொடக்கத்திலேயே இந்த ஆயிலை தடவிக்கொள்வதும், நுகர்வதும் தலைவலியை அண்டவிடாது துரத்த உதவும். லாவண்டர் வரிசையில் பெப்பர்மின்ட் ஆயிலும் பயனளிக்கும். இதன் உட்பொருட்கள் தலைவலியின் பாதிப்பை குறைக்கும் என்பது ஆய்வின் அடிப்படையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒற்றைத் தலைவலி முழுமையாக குணமடைவதற்கு அக்குபஞ்சர் சிறந்த உபாயமாகும். உடலில் ஆங்காங்கே தடைபட்டிருக்கும் ஆற்றலை அதற்கான புள்ளிகளின் வழியாக அடையாளம் கண்டு விடுவிப்பதன் வாயிலாக நிவாரணம் பெற முடியும்.

தலையாய உணவுகள்

தலைவலி கண்டவர்கள் அதன் நிவாரணத்துக்காகவும், தலைவலியின் பக்கவிளைவான குமட்டல் உணர்வைத் தணிக்கவும் இஞ்சி மாமருந்தாகும். ஒரு குவளை நீரில் 5 கிராம் இஞ்சியை இடித்து சேர்த்து, கொதிக்க வைத்ததில் 30 மிலி அளவுக்கு அருந்தலாம். இதனுடன் சிறிதளவு தேன் கலப்பது, முழுமையான பலனுக்கு உதவும். இதனை அன்றாடம் உட்கொண்டு வர தலைவலியில் இருந்தும், அது விளைவிக்கும் குமட்டல் உணர்விலிருந்தும் விடுபடலாம்.

தலைவலிக்கு மற்றொரு இயற்கை உணவு மருந்து திராட்சை. உலக அழகி கிளியோபாட்ரா தன்னை வருத்தி வந்த ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபட, திராட்சை சாற்றினை தொடர்ந்து உட்கொண்டு வந்ததாக ஒரு வரலாற்றுத் தகவல் உண்டு. கிளியோபாட்ரா வழியில் தலைவலியை தொலைக்க விரும்புவோர், விதையுடன் கூடிய பன்னீர் திராட்சை ரகங்களை அடையாளம் கண்டு உட்கொள்ளலாம். இதன் உட்பொருட்கள் நரம்பினை தூண்டச் செய்தும், இரத்தக்குழாயினை விரிவடையச் செய்தும் தலைவலியின் பாதிப்பை போக்க உதவும்.

விட்டமின் சி அதிகம் அடங்கிய எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பெருநெல்லி போன்ற பழங்களை போதுமான நீர் கலந்து அருந்தலாம். இவை, தலைவலிக்கான முழுமையான மருந்தல்ல என்றபோதும், நாள்பட்ட தலைவலியின் வீரியத்தை குறைக்க உதவும். மேலும் தலைவலி கண்டவர்களின் உடல் ஏற்கனவே அமிலத்தன்மை கூடியிருக்கும் என்பதால் அவற்றைத் தூண்ட வாய்ப்பளிக்காது, பழங்களின் புளிப்பு இயல்பைகுறைக்கும் வகையில் அவற்றின் சாற்றில் நீர் கலந்தே உட்கொள்ள வேண்டும். உடலின் அதிகப்படி அமிலத்தன்மையை குறைக்க இளநீர் மற்றும் மோர் அருந்துவதும் நல்லது. சளி மற்றும் சைனஸ் தொடர்பான தலைவலியாளர்கள், இந்த இரண்டையும் தவிர்க்கவும்.

பீட்டா கரோட்டின் அதிகம் அடங்கிய கேரட்டை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். ஜூஸ் எடுத்து அருந்துவதை விட இவ்வாறு உட்கொள்ளும்போது கேரட்டின் விட்டமின் ஏ, நரம்புகளை வலுப்படுத்தி மூளையின் அமைதிப்படுத்த உதவும்.

உறக்கமும், நீரும் உதவும்

தலைவலிக்கு எதிரான நடவடிக்கைகளில் உணவூட்டத்துக்கு இணையாக உறக்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றாடம் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் பழகியவர்கள் தலைவலியின் வீரியத்திலிருந்து விடுபடலாம். தூக்கம் துண்டாடப்படும்போது, தேகம் தலைவலியை வரவேற்கத் தயாராகி விடும்.

உடலுக்கு போதுமான நீரேற்றம் இருக்கிறதா என்பதன் அடிப்படையிலும் தலைவலி எட்டிப்பார்க்கும். அதனால் தினசரி உடலுக்கு அடிப்படையான தண்ணீரை அருந்தி வருவது அவசியம். நமது அன்றாடங்களை படுத்தியெடுக்கும் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்வியல் அழுத்தங்களை சரிபார்ப்பதன் வாயிலாகவும், தலைவலிக்கான காரணத்தை கண்டறிந்து அவற்றைக் களைய முயலலாம். அந்த வகையில் டென்ஷன் மற்றும் மனப்பதட்டத்தை குறைத்துக்கொண்டாலே, தலைவலி வருவதற்கான வழியை சரிபாதி அடைத்து விடலாம்.

இயற்கைக்கு இசைவான வழிகள்

இதற்கான இயற்கை வழிமுறையாக உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான உபாயங்களை பழகலாம். பிடித்த இசை கேட்பதில் தொடங்கி, மூச்சுப் பயிற்சி முதல் தியானம் பழகுவது வரை பயனளிக்கும். இவை நம்மை படுத்தும் தலைவலி தவணைகளின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் குறைக்க ஏதுவாகும். இயற்கை மற்றும் யோக மருத்துவத்தில் வழங்கப்படும், ஆழ்நிலை தளர்வு பயிற்சி மற்றும் துரித தளர்வுக்கான பயிற்சிகளையும் அணுகிப் பெறலாம்.

தலைவலியை துரத்தும் சுவாசப் பயிற்சிகள்

உடலை தளர்த்தவும் மூளைக்கு தேவையான ஆக்சிஜனை சேர்க்கவும் சுவாசப் பயிற்சிகள் அவசியம். இயல்பாகவே சிலரின் சுவாசிக்கும் வழக்கம் ஏறுமாறாக இருக்கும். மூச்சை உள்ளிழுக்கும்போது சிலருக்கு வயிறு உள்ளடங்கும். அது தவறானது. மூச்சை இழுக்கும்போது வயிறு விரிவடைவதே சரியான முறை. அவற்றை சீர்படுத்தவும் மூச்சுப்பயிற்சி உதவும். சுவாச மண்டலத்தின் தசைகள் வலுப்பெறவும் சுவாசப் பயிற்சி உதவும்.

நுரையீரல் முழுமையாக விரிவடைந்து சுருங்கி, உடலுக்கான ஆக்சிஜன் தேவைக்கு உதவும்போது மைக்ரேன் மற்றும் கிளஸ்டர் தலைவலியாளர்கள் அவற்றின் பாதிப்பிலிருந்தும், மன அழுத்தத்தின் பிடியிலிருந்தும் இயற்கையாக விடுபட ஏதுவாகும். சுவாசப் பயிற்சியின் மூலமாக மார்பு தசைகள் வலுப்பெறுவதும், மன அழுத்தத்தின் விளைவிலான உடல் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் உதவும்.

தலைவலிக்கு வழிகோலும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை தணிக்க மூச்சுப்பயிற்சிகள் உதவும். முறையான மூச்சுப்பயிற்சிகளை இயற்கை மற்றும் யோக மருத்துவர் மற்றும் உரிய பயிற்சியாளர்களை அணுகி கற்றுக்கொள்வது நல்லது. பிராணாயாம வழிமுறைகளில் அடங்கும் ’அனுலோம் - விலோம்’ மற்றும் ’பிராமரி’ போன்றவை பழகலாம். அனுலோம் - விலோம் மூச்சுப்பயிற்சியை அன்றாடம் 10 முறை பயிலும்போது தலையில் நல்ல தளர்வை உணரலாம். இதன் நிறைவாக தலைக்கு மென்மையான மசாஜ் பெறுவதும் நமது நோக்கத்தை நிறைவு செய்யும். பிராமரி பழகுவது உடல் மற்றும் மனதை தளர்வடையச் செய்யும் ஆழ் சுவாசத்துக்கான சிறப்பான உத்தியாகும். நிறைவாக லேவண்டர் ஆயில் கொண்டு நெற்றிப் பிரதேசத்தில் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

உணவு முதல் மூச்சுப் பயிற்சி வரையிலான வழிமுறைகளை தொடர்ந்து பழகும்போது, இயற்கையான முறையில் தலைவலியிலிருந்து விடுபட வாய்ப்பளிப்பதுடன் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும். இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளை தணிப்பது மற்றும் போக்குவதற்கான உபாயங்கள் மட்டுமே. இயல்புக்கு மாறான அறிகுறிகளுடன் கூடிய தீவிர தலைவலி கண்டவர்கள், தாமதிக்காது மருத்துவ ஆலோசனையை அணுகி தெளிவு பெறுவதும் முக்கியம்.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

x