மகாராஷ்டிராவில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், பால்கர், ராய்காட் உள்ளிட்ட தொடர் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பால்கர் மாவட்டத்தில் உள்ள வாடா, விக்ரம்காட் தாலுகாக்களுக்கும் இதே போல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புனே, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீரால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ராய்காட், பால்கர் ஆகிய இரு மாவட்டங்களும் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம், ராய்காட் மாவட்டத்துக்கு இன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ராய்காட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக குண்டலிகா, அம்பா மற்றும் சாவித்திரி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் தொடர்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால்கார் மாவட்டத்திலும் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், அம்மாவட்டத்துக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளது. கனமழை காரணமாக இந்த இரு மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x