பாஜக கவுன்சிலர் ஓராண்டாக பலாத்காரம் செய்தார்: இளம்பெண் பரபரப்பு புகார்


அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி விவாகரத்தான பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள துவாரகாபுரி 82வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஷானு என்ற நிதிஷ் சர்மா. பாஜகவைச் சேர்ந்த இவர் மீது விவாகரத்து பெற்ற 32 வயதான பெண் துவாரகாபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதால் உதவிக்காக ஆலோசனை பெற நிதிஷ் சர்மாவிடம் சென்றதாகவும், அவர் தன்னை மே 10, 2023 முதல் ஏப்ரல் 16, 2024 வரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியும், வங்கியில் பெற்ற கடனை அடைப்பதாகவும் கூறி பலமுறை நிதிஷ் சர்மா பலாத்காரம் செய்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.

மேலும், காதலனிடமிருந்து தன்னை விலகி இருக்குமாறு நிதிஷ் சர்மா வற்புறுத்தினார். அதன் பிறகு அவர் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து பாஜக கவுன்சிலர் நிதிஷ் சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376, 376 (2) (என்) மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிசிபி ராஜேஷ் தண்டோடியா தெரிவித்துள்ளார்.

x