எதிர்க்கட்சிகள் போர்க்கோடி முதல் நேபாள விமான விபத்து வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


மத்திய பட்ஜெட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்ஜெட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த பட்ஜெட் பாஜகவின் கூட்டாளிகளை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. இது பாரபட்சமான பட்ஜெட். இந்த பட்ஜெட்டை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” எனக் குறிப்பிட்டார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ், “விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரியிருந்தோம். ஆனால், விவசாயிகளை விட தங்கள் அரசாங்கத்தை காப்பாற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு விலை கொடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவது ஓர் ஆயுதமாக கருதப்படுமானால், அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரித்துள்ளார்.

“பழிவாங்கல் வேண்டாம்” - பிரதமருக்கு முதல்வர் அறிவுறுத்தல்: முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். பிரதமர் மோடி அவர்களே, “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்" என்று கூறி நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராடும் வீடியோவை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கேள்வி: காங்கிரஸ் ஆட்சிக் கால பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா என மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

‘நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது தமிழகத்துக்கே பாதிப்பு’ - நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால் பாதிக்கப்படுவது தமிழக மக்களே என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது” என தெரிவித்துள்ளார்.

“இதுவரை 250 மீனவர்கள் கைது” - ஸ்டாலின் கடிதம்: “இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22-ம் நாள் வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச கைது எண்ணிக்கை இது. இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை: ராகுல் கருத்து: பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்பட, அரசுக்கு இண்டியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் என்பது விவசாயிகளின் உரிமை; அதை அவர்கள் பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.

பணவீக்கம் குறித்து ப.சிதம்பரம் கேள்வி: அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார். மாநிலங்களவையில் அவர் பேசும்போது, “பட்ஜெட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது” என்று சாடினார்.

“நீங்கள் ஒரு பெண்...” - பிஹார் பேரவையில் நிதிஷ் கொந்தளிப்பு: பிஹார் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அம்மாநில முதல்வர் முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தார். கேள்வி எழுப்பிய ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வானை நோக்கி, “நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாது” என்று ஆவேசமாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக ரயில் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி? - கடந்த பிப்ரவரியில் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட 879 கோடி ரூபாயைவிட 7 மடங்கு அதிகம்” என்றார்.

நேபாள விமான விபத்தில் 18 பேர் பலி: நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பற்றி எரிந்து அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்தனர். விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான விமானம் சவுர்ர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம் புதன்கிழமை காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

x