திடீரென சரிந்து விழுந்த அலங்கார வளைவு: மம்தா பானர்ஜி பங்கேற்ற விழாவில் விபரீதம்


கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்த விபத்தில் பலர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவரான உத்தம் குமார் கடந்த 1980ம் ஆண்டு காலமானார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத் துறையில் நடிகராக வலம் வந்த உத்தம் குமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேற்குவங்க ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவரான உத்தம் குமாரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவரது 44வது நினைவு தினம் இன்று கொல்கத்தாவில் அனுசரிக்கப்பட்டது. மாநில தகவல் மற்றும் கலாச்சார துறை சார்பில் இந்த நிகழ்ச்சி தனதன்யா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அப்போது ஒரு வாயில் வழியாக ஏராளமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த நுழைவாயிலும், அதன் மீது அமைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவும் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏராளமானோருக்கு லேசானது முதல் மிதமான காயம் வரை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். சிலர் படுகாயம் அடைந்ததை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தற்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

x