ரூ.10 லட்சம் அபராதம், சிறை தண்டனை: வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை தடுக்க பிஹாரில் புதிய சட்டம்


பாட்னா: பிஹார் மாநிலத்தில் அரசு ஆட்சேர்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்க, 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் உட்பட கடுமையான தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் ஒரு மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிஹார் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா-2024யை, அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நிகழ்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிஹாரில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் உட்பட கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

x