குளிர்காலத்தில் தாக்கும் ‘அக்கி’: இயற்கை வழியில் போக்குவது எப்படி?


வழக்கமாக வெயில் காலத்தில் மட்டுமே தென்படும் ‘அக்கி’ தற்போது குளிர் காலத்திலும் பரவலாக எட்டிப்பார்க்கிறது. தோலில் எரிச்சல், வலி, கொப்புளம் என பாதிக்கப்பட்டவரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய, எளிதில் மற்றவருக்கு தொற்றக் கூடிய இந்த அக்கியை குறித்தும், அதனை இயற்கை மருத்துவம் வாயிலாக அகற்றுவது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

எளிதில் பரவும் அக்கி

நாம் அக்கி என்று அழைப்பதை ஆங்கிலத்தில் ஷிங்கிள்ஸ்(Shingles) அல்லது ஹெர்பெஸ் ஸோஸ்டர்(Herpes zoster) என்பார்கள். சின்னம்மைக்கு காரணமாகும் அதே வைரஸ்(Varicella zoster), அக்கி பாதிப்புக்கும் காரணமாகிறது. உடலில் செயல்படாத நிலையிலிருக்கும் இந்த வைரஸ், பின்னர் தனது வேலையைக் காட்டும்போது அக்கியாக வெளிப்படுகிறது. சின்னம்மை பொதுவாக குழந்தைகளை பாதிக்கிறது என்றால், அக்கி பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கக்கூடியது.

கைகளில் சிவந்த தடிப்புகள் உருவாகி, இரண்டொரு தினங்களில் அவை கொப்புளமாக மாறும். பாதிப்புக்கு ஆளானவர் காய்ச்சல் அடிப்பதாகவும், சோர்வாகவும் உணர்வார். ஒரு சிலருக்கு தலைவலி மற்றும் இருமல் இருக்கலாம். வைரஸ் நரம்பு இழைகளை பாதிப்பதால், நரம்பு வலியையும், மன அழுத்தத்தையும் உணர்வார்கள். சருமத்தில் கொப்புளங்கள் ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதும், அவற்றை ஒட்டிய எரிச்சல் மற்றும் வலி ஆகியவை அக்கி பாதித்தவருக்கு தொந்தரவளிக்கும்.

அக்கி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடியதாகும். தனது தடிப்புகளை சொறிந்த கையால் மற்றவர்களை அல்லது அவர்களின் உடமைகளைத் தொடுவது, அக்கி பாதித்தவரின் உடைகள் உள்ளிட்டவை அடுத்தவரின் உடைகளுடன் சேர்வது போன்றவற்றினாலும் இவை எளிதில் பரவும்.

குணமாக உதவும் உணவுகள்

அக்கி பாதித்தவருக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். இதன் பாதிப்பை தவிர்க்க சத்தான ஆகாரங்கள் உட்கொள்வது அவசியம். வைட்டமின் சி உள்ளடங்கிய பழங்கள் அன்றாட உணவில் இடம்பெற வேண்டும். பழங்களை அப்படியே உட்கொள்ளலாம். ஜூஸ் எடுத்து பருக விரும்புவோர் தேன் சேர்த்துக்கொள்ளலாம். சிவப்பு செம்பருத்தியின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம். செம்பருத்தி இதழ்களை பேஸ்ட் ஆக அரைத்து, அவற்றை அக்கி பாதித்த இடங்களில் பூசி வரலாம்.

பொட்டசியம், வைட்டமின் சி மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தி வாய்ந்த அதிமதுரத்தை, பட்டை, இஞ்சி, மஞ்சள் சேர்த்து தேநீராக தயாரித்து அருந்தலாம். இவற்றை க்ரீன் டீ-யில் கலந்தும் அருந்தலாம். இவை அக்கி பாதிப்பின் எரிச்சலை குணப்படுத்த உதவும். பாதிப்பு கண்ட சருமத்தின் மீது மெல்லிய துணியை போர்த்தி அதன் மீது அதிமதுரம் தயாரித்த நீரினை தடவுவதும் அக்கி குணமாகவும், அதன் தொந்தரவுகளை குறைக்கவும் உதவும். சருமத்தின் எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தும் குடை மிளகாய் போன்றவற்றை சமையலில் தொடர்ச்சியாக சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் நாளடைவில் வலி குறைவதையும் உணர இயலும்.

முழுதானியங்களை முதன்மை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை பட்டாணி, தக்காளி, பசலைக்கீரை, பீன்ஸ், பூசணி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அடங்கியவற்றை, அவற்றின் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய உட்பொருட்களுக்காக அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி12, வைட்டமின் இ, அமினோ அமிலத்தில் குறிப்பாக லைசின் ஆகியவற்றுக்கும் உணவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும். பழங்களில் ஆரஞ்சு, பைனாப்பிள், பப்பாளி உள்ளிட்டவை நல்லது. இந்த சீஸனில் கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். நீர் அதிகம் அருந்துவதும், பழங்களின் ஜூஸ் உள்ளிட்ட நீர் ஆகாரப் பொருட்களை அதிகம் உட்கொள்வதும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உண்ண வேண்டிய உணவுகளுக்கு இணையாக தவிர்க்க வேண்டிய உணவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆர்ஜினைன் என்னும் அமினோ அமிலம் செறிந்த உணவுப்பொருட்களை தவிர்த்தாக வேண்டும். அவை அக்கி வைரஸ் பெருக்கத்துக்கு தூண்டலாகி, குணமாவதை தாமதப்படுத்தவும் செய்யும்.

சாக்கலேட், கொட்டைகள், விதைகள், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றிலிருந்து தற்காலிகமாக தள்ளியிருக்க வேண்டும். இனிப்பு, பதப்படுத்திய உணவுகள், மைதாவில் செய்த பண்டங்கள், கர்போஹைட்ரேட் அதிகம் கொண்டவை ஆகியவற்றுக்கும் தடை போடலாம். இவை அக்கி குணமாக நாள்படுத்தும். வெண்ணெய், பாலாடைக்கட்டி, பாமாயில் ஆகியவற்றில் செய்த உணவுகளையும் தவிர்க்கலாம்.

குளியல் நல்லது

மெல்லிய பருத்தி துணியை கொண்டு சாதாரண நீரை தடிப்புகள் மற்றும் கொப்புளம் கண்ட இடங்களை தூய்மை செய்யலாம். சில பெரியவர்கள் வெந்நீரை பரிந்துரைப்பார்கள். வெந்நீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அக்கியின் தொந்தரவுகளை அதிகம் உணரச் செய்துவிடும். மேலும் குணமாவதையும் தாமதப்படுத்தும். அதே போல எரிச்சல் போக்கும் முயற்சி என ஐஸ் கட்டி சேர்த்த நீரை பயன்படுத்துவார்கள். அதுவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட சாதாரண நீர் போதும்.

தூய்மை செய்வதற்கு அப்பால், இந்த நீரில் ஒரு குளியல் போடுவது இன்னும் சிறப்பானது. ஆனால் சோப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இந்த குளியல் அக்கியின் எரிச்சலை தடுப்பதோடு, கொப்புளங்கள் அடங்கி, விரைந்து குணமாகவும் உதவும். குளிர்காலத்தில் சுடுநீரில் மட்டுமே குளித்து பழகியவர்கள், வெந்நீரை சற்று ஆறிய பிறகு வெதுவெதுப்பாக பயன்படுத்தலாம்.

குணமாக்க உதவும் ’பேக்’

ஒரு கப் குப்பை மேனி இலை, 50 கிராம் கஸ்தூரி மஞ்சள், கையளவு வேப்பிலை ஆகியவற்றுடன் அப்போதுதான் எடுத்த கற்றாழை ஜெல் ஆகியவை கலந்த பேக் தயாரித்து பூசுவது அக்கி குணமாக உதவும். முதல் மூன்றையும் நன்றாக அரைத்து பின்னர் கற்றாழை சேர்த்து பேஸ்ட் போலாக்கி, அக்கி பாதிப்பு கண்ட இடங்களில் தடவி வரலாம். நாளடைவில் பாதிப்பு கண்ட இடங்களில் உலர்ந்த அக்கி உதிர்வதையும் கண்கூடாக பார்க்கலாம். அக்கி பாதித்தத்தின் சரும தடயம் வரை அகற்ற இந்த பேக் உதவும்.

எரிச்சல் மற்றும் அரிப்பு காரணமாக மன அழுத்தம் மிகுந்திருக்கும். எரிச்சல் காரணமாக தடிப்பு கண்ட இடங்களை சொறியத் தூண்டும். அவ்வாறு செய்வது அக்கி பரவ முக்கிய காரணமாகிவிடும். எனவே மன அழுத்தம் குறைக்கும் உபாயங்களை அடையாளம் காண்பதும், கைகளை கட்டுப்படுத்துவதும் நல்லது.

அரோமா எண்ணெயில் ஒரு சொட்டினை 5மிலி தேங்காய் எண்ணெயில் கலந்து, பாதிப்பு கண்ட இடத்தில் பூசி வரலாம். அரோமா ஆயிலில் சாமோமைல்(Chamomile) உகந்தது.

கோடைக்காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய சீதோஷ்ணத்தில் அக்கியின் எரிச்சல் குறைவாகவே இருக்கும். எனவே மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி குளிர்காலத்திலும் தாக்கும் அக்கியின் பாதிப்புகளை எளிதில் போக்கி குணம் பெறலாம்!

x