கூட்டணிக் கட்சிகளை குஷிப்படுத்தும் பட்ஜெட்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் விமர்சனம்


புதுச்சேரி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து, பாஜக கூட்டணிக் கட்சிகளை குஷிப்படுத்தும் பட்ஜெட் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘பிரதமர் நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்று இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்கும், நிறைய தொழிற் சாலைகள் உருவாக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், பணவீக்கம் குறையும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் புனரமைக்கப்படும் என்ற கனவோடு இருந்தார்கள். ஆனால், பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது.

விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளான விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை, அறுவடையான தானியங்களை சேமிப்பதற்கு உதவித்தொகை, உரத்துக்கு மானியம், விளைபொருள் மானியம் என இது எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகள் வங்கிக் கடன் பெறுவதற்கு மட்டும் வழிவகை செய்யப்பட்டு அவர்களை கடனாளிகளாக ஆக்குவதற்கு இந்த பட்ஜெட் வழிவகை செய்துள்ளது. விவசாயிகளுக்கு ஏமாற்றமே இந்த பட்ஜெட்டில் உள்ளது.

புதிய தொழிற்சாலைகள் ஆரம்பித்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நிறைய திட்டங்களை நிதி அமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் மிக குறைந்த சலுகைகளே கொடுக்கப்பட்டுள்ளது. சிறுதொழில் நடுத்தர தொழில் நடத்துபவர்கள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு தாராளமாக நிதி வழங்கிட விதிகளை தளர்த்துவார்கள் என்ற அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

இந்த நாட்டில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்ற, 40 சதவீதம் ஏற்றுமதி வருமானத்தை கொடுக்கின்ற சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. வருமான வரித் துறையில் பல மாற்றங்கள் கொண்டு வந்து நடுத்தர மக்கள் வரை வரிசலுகைகளை இந்த அரசு வழங்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனல், ஏற்கெனவே உள்ள ரூ.3 லட்சம் வரை வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்றும், ரூ.3 லட்சத்திற்கு மேல் ரூ.7 லட்சத்திற்குள் 5 சதவீதம் வரி என்றும் 7 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை 10 சதவீதம் வரி என்றும் வரி உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் அரசு ஊழியர்கள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வருமான வரியை குறைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை நிர்மலா சீதாராமன் கொண்டு வராதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

இந்த பட்ஜெட் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவை தக்கவைக்க நிதியை வாரி வழங்கி இருக்கின்ற பட்ஜெட். பிஹாருக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.26 ஆயிரம் கோடியும், ஆந்திர மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், எக்ஸ்பிரஸ் பாதைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஆதாரம் பிஹாருக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கை மைனாரிட்டி அரசாங்கமாக இருக்கும் நரேந்திர மோடி அரசை பாதுகாக்க கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கின்ற சலுகை என்று கூறலாம். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் இருக்கின்ற புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசும் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. புதிய ரயில்வே திட்டங்கள் புதுச்சேரிக்கு அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்கள் எதுவுமே இல்லை.

இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. கூட்டணி கட்சிகளை குஷிப்படுத்தும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றோ, பணம் வீக்கம் குறையும் என்றோ, விலைவாசி கட்டுக்குள் வரும் என்றோ, வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்படும் என்றோ மக்கள் எதிர்பார்க்க முடியாது.

நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு மக்களை ஏமாற்றும், மாற்றுக் கட்சி மாநில ஆட்சிகளை பழிவாங்கும் பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றுகின்ற பட்ஜெட்.’ இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x