டெல்லி: தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை உடனடியாக ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கத் திணறியதால், வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, பல்வேறு தரப்பினரிடமும் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில், தனது பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே, அது குறித்து உங்கள் பதில் என்ன என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை சார்பில் பதில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, ”நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்றிருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருந்து வருகிறீர்கள்.” என நீதிபதிகள் தரப்பு அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ”நாங்கள் கேட்பது மிகவும் சாதாரணமான கேள்வி. அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான பதிலை தான் எதிர்பார்க்கிறோம். நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே என கேட்கிறோம்.
தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால், அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள். இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால், வழக்கை நாளைக்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது பதில் கூறுங்கள்.” என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.