விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும்: ராகுல் காந்தி உறுதி


புதுடெல்லி: குறைந்தபட்ச விலை ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த 12 விவசாய சங்கங்களின் தலைவர்களை, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், “பொதுத் தேர்தலுக்கான எங்களது தேர்தல் அறிக்கையில், எம்எஸ்பி-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம்.

இதை நிறைவேற்ற முடியும் என்பதை நாங்கள் மதிப்பீடு செய்தோம். இந்த சந்திப்பில், இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களுடன் கலந்துரையாடி, இதை செயல்படுத்துவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.” என்றார். விவசாயிகளுடனான சந்திப்பின்போது காங்கிரஸ் எம்பி-க்கள் கே.சி.வேணுகோபால், தீபேந்தர் சிங் ஹூடா, அமரீந்தர் சிங் ராஜா வாரிங் மற்றும் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையே ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து விவசாயிகள் கூறுகையில், "மக்களவையில் எங்களின் கோரிக்கைகள் எழுப்பப்படும் என்றும், ஹரியாணாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்" என்றனர்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயம், அதைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

x