அம்மனாக சித்தரிக்கப்படும் 7 சிறுமிகள்: சப்த கன்னியர் கடல் அன்னை வழிபாடு!


தைப்பொங்கல் பண்டிகையையொட்டி ஆர்.எஸ். மங்கலம் அருகே சப்த கன்னியர் பொங்கல் வைத்து கடல் அன்னையை வழிபட்டனர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உழவுக்கும், உழவருக்கும் உதவிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக புத்தம் புதிய பானையில் பொங்கல் வைத்து இன்று வழிபாடு செய்தனர்.

விவசாயம் தழைத்தோங்க நிலத்தை பண்படுத்த உதவிய மாட்டிற்கு மரியாதை செலுத்தம் விதமாக மாட்டுப்பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் பராம்பரியமாக இத்தகைய வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருக்க, விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஒவ்வொருவரும் தங்களது தொழில் நிமித்தமாக பொங்கல் திருநாளில் வழிபடும் வழக்கமும் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணை கடற்கரை கிராமத்தில் பொங்கல் நாளில் கடல் அன்னையை வழிபடும் முறை தொன்று தொட்டு இருந்து வருகிறது. கடல் அன்னை வழிபாட்டிற்காக, இங்குள்ள ரண பத்ரகாளியம்மன் கோயில் முன் கடந்த 10 நாட்களுக்கு முன் கிராம பொதுமக்கள் கூடுகின்றனர். ஊர் வழக்கப்படி சுவாமி தரிசனம் செய்து, சிறுமிகள் 7 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர்.

ஒரு வாரம் விரதம் மேற்கொள்ளும் 7 சிறுமிகளையும் பொங்கல் நாளன்று காலையில் அம்மனாக சித்தரித்து, புத்தாடை அணிந்து, கழுத்தில் மாலையிட்டு, மேளதாளம் முழங்க பொங்கல் நிரம்பிய பானைகளை தலையில் சுமந்து கடற்கரை அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு படகில் 7 சிறுமியரும் ஏற்றப்பட்டு கடலில் சிறிது துாரம் சென்று தேங்காய் உடைத்து மீ ன்பிடி தொழில் சிறக்க கடல் அன்னையை வழிபட்டு கரை திரும்புகின்றனர்.

பின்னர் கோயிலுக்கு வரும் அவர்களை பொதுமக்கள் வணங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த சப்த கன்னியர் பொங்கல் வழிபாட்டை காண கிராம மக்கள் கடற்கரையில் திரண்டனர்.

x