கர்நாடகாவில் 1,351 இடங்களில் நிலச்சரிவு அபாயம்: புவியியல் ஆய்வு மையம் தகவல்


பெங்களூரு: கர்நாடகாவில் 1,351 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய ராக் மெக்கானிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பதிலளித்தார்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த விஷயம் கர்நாடகா சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. பாஜக எம்எல்சிகளான சி.டி.ரவி, என்.ரவிகுமார், சாலவடி டி. நாராயணசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை நேற்று கொண்டு வந்தனர். அதற்கு கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பதிலளித்தார்.

அப்போது அவர் பேசுகையில்," கடலோர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு விரைவில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மானியத்தை விடுவிக்க உள்ளோம். மிகக் குறைந்த மழைப்பொழிவு, மேகமூட்டம், இயற்கைச் சரிவுகளில் குறுக்கிடுதல், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் இயற்கையான ஓட்டத்தைத் திசைதிருப்புதல், சாலை அமைக்கும் பணிகள் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கர்நாடகாவில் 1,351 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய ராக் மெக்கானிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பதிலளித்தார்.

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா அருகே ஷிரூர் மற்றும் ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் தாலுகாவில் ஷிரடி காட் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, கர்நாடகாவில் இதுபோன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா அருகே ஷிரூரில் சமீபத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதன் பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் தாலுகாவில் உள்ள சிருங்கேரி ஹொரநாடு இணைப்பு சாலை, மங்களூரு மற்றும் சிருங்கேரி இடையே இணைக்கும் சாலை, ஷீரடி காடி சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குடகு மாவட்டத்தில் மடிகேரி அருகே உள்ள சம்பாஜே காட் மலைத் தொடரிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மடிக்கேரி நகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பெரும் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

x