பட்ஜெட் உரையில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட முடியாது: எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி


புதுடெல்லி: 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட முடியாது என கூறி, அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

மக்களவையில் நேற்று 2024-2025ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆளும் ஆந்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை இன்று கூடியதும் பட்ஜெட்டில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "எதிர்க்கட்சிகள், குறிப்பாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று அறிவித்த பட்ஜெட் பற்றி தனது கருத்துகளைக் கூற எழுந்து நிற்பது துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் கவுரவத்துக்காக, நான் சொல்வதைக் கேட்க எதிர்க்கட்சியினர் அவையில் இருப்பார்கள் என நினைத்தேன். எனது எதிர்பார்ப்பு சற்று அதிகமானதாக இருக்கலாம்.

நான் பல மாநிலங்களை குறிப்பிடவில்லை என்றும், இரண்டு மாநிலங்கள் பற்றி மட்டுமே பேசினேன் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார். இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தது. அவர்கள் பல்வேறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஒவ்வொரு பட்ஜெட்டிலும், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பில்லை என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.

மகாராஷ்டிராவின் வாதவனில் மிகப் பெரிய துறைமுகத்தை அமைக்க பிரதமர் மோடியின் தலைமையில் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நான் பெயரைக் குறிப்பிடாததால் மஹாராஷ்டிரா புறக்கணிக்கப்பட்டதா? அந்த திட்டத்துக்காக ரூ.76,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது." என்றார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த கடந்த பிப்ரவரி 1 மற்றும் முழு பட்ஜெட் தாக்கல் செய்த நேற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பெயரை குறிப்பிடாததை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டியுள்ளார்.

x