பழைய அல்லது புதிய வரிவிதிப்பு முறை: எது உங்களுக்கு பயனளிக்கக் கூடியது?


புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் புதிய வரி விதிப்பில் விலக்கு வரம்பை உயர்த்தியுள்ளார். இது முன்பை விட மிகவும் சாதகமானதாக பார்க்கப்படுகிறது. எனவே எந்த வரிவிதிப்பு முறையை தேர்வு செய்தால் பயனளிக்கும் என்பது குறித்து இங்கே காண்போம்.

2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதன்படி வரி விதிப்பு முறையில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வரி செலுத்துவோர் எந்த முறையை தேர்ந்தெடுப்பது என்ற உறுதியற்ற நிலையில் உள்ளனர். நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால், எந்த வரிவிதிப்பு முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் விவரம் வருமாறு:-

உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கவும். புதிய வரி விதிப்பில் நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் வீட்டுக் கடன் வட்டியில் ரூ.2 லட்சம் வரை விலக்கு கோரவில்லை அல்லது கணிசமான வீட்டு வாடகைக் கொடுப்பனவுக்கு (எசர்ஆர்ஏ) தகுதி பெறவில்லை என்றால், புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வரி முறைக்கு மாறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வரி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த விலக்குகள் இல்லாமல் பழைய வரி முறை சாதகமாக இருக்காது. புதிய வரி முறையின் கீழ் முன்மொழியப்பட்ட வரி அமைப்பு (தொகை ரூபாயில்):

0-3 லட்சம்: இல்லை

3-7 லட்சம்: 5%

7-10 லட்சம்: 10%

10-12 லட்சம்: 15%

12-15 லட்சம்: 20%

15 லட்சத்துக்கும் மேல்: 30%

அதே நேரத்தில் உங்கள் வருமானம் அதிகமாக இருந்தால், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும். உதாரணமாக, ரூ.3,93,750க்கு மேல் கழிவுகளைக் கோரும் ரூ. 11 லட்சம் வருமானம் கொண்ட ஊழியர், பழைய வரி முறையின் கீழ் அதிகமாக சேமிப்பார். ரூ.11 லட்சம் சம்பாதிப்பவருக்கு இந்த அளவிலான விலக்குகளைப் பெறுவது சவாலானதாக இருந்தாலும், இரட்டை வருமானம் கொண்ட தம்பதிகள் அதிக விலக்குகளைப் பெற முடியும்.

சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள், குழந்தைகளின் பள்ளி கட்டணம், பிரிவு 80சி-ன் கீழ் முதலீடுகள், வீட்டுக் கடன் வட்டி மற்றும் வீட்டு வாடகை ஆகியவற்றில் வரி விலக்குகளை பழைய வரி விதிப்பு அனுமதிக்கிறது. எனவே, உங்கள் செலவுகள் இந்த வகைகளுடன் இணைந்தால், பழைய வரி முறை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

x