படுத்தும் மாதவிடாய் நேரத்து பிடிப்புகள்: விடுபடுவது எப்படி?


மாதவிலக்கு தினங்களில் பெண்களை படுத்தும் அவஸ்தைகளில் ’தசை பிடிப்புகள் மற்றும் அவை சார்ந்த வலிகள்’ முக்கியமானவை.

மாதவிடாய் தினங்களில், குறிப்பாக இளம்பெண்களுக்கு அடிவயிறு, இடுப்பு, கீழ்முதுகு, மேல் கால்கள் ஆகிய இடங்களில் வலிகளை உணர்வார்கள். மாதவிடாயின் முந்தைய தினம் தொட்டே ஒருவிதமான சோர்வு மற்றும் அசௌகரியத்தை உணர்வார்கள். இதையொட்டி முதலிரு தினங்களில் வலியோடு இணைந்த தசை பிடிப்பையும் பலர் உணர்வார்கள். மேலும், இயல்பான உடல் உழைப்பு மற்றும் சுறுசுறுப்புக்கு வாய்ப்பின்றி முடங்க நேரிடுவதாலும் இந்த பிடிப்புகளின் அவஸ்தை அதிகமாக இருக்கும். இயற்கை மருத்துவ வழியில் எவ்வாறு இந்த தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

என்ன நடக்கிறது?

மாதவிடாய் காலத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? புரோஸ்டாகிளாண்டின்(prostaglandin) என்னும் ஹார்மோன் சுரப்பதில் இதற்கான நிகழ்வுகள் தொடங்குகின்றன. இந்த ஹார்மோன் கர்ப்பப்பை சுவரை சுருங்கச் செய்ய வைக்கும். இதன் மூலம் வெளிப்படும் உதிரமே மாதவிடாயாக உணர்கிறோம். இந்த ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் கர்ப்பப்பையின் இயல்பான சுருக்கம் நிகழாது வலிக்கு காரணமாகின்றன.

இரத்தசோகை கண்டவர்கள், 10 மற்றும் அதற்கு குறைவான வயதுகளில் பருவமெய்தியவர்கள் ஆகியோர் இந்த வலியை கூடுதலாக உணர்வார்கள். சிலருக்கு மரபு ரீதியிலான காரணங்களாலும் இந்த வலி அதிகம் தென்படும். ஒரு சிலருக்கு கர்ப்பபையில் எழும் பிரச்சினைகள் மற்றும் நீர்க்கட்டிகளும் இந்த வலிக்கு காரணமாகலாம்.

வெந்நீர் - தண்ணீர் தீர்வு தரும்

மாதவிடாய் நேரத்து வலி போக்குவதில் ஆகச்சிறந்த வழிகளில் ஒன்று வெந்நீர் ஒத்தடம். இதற்கென கடைகளில் கிடைக்கும் பிரத்யேக வெந்நீர் ஒத்தடப் பைகளை வாங்கி பயன்படுத்தலாம். வலி தென்படும் அடிவயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் இதன் மூலம் வெப்பத்தைக் கடத்தும்போது, உடல் உள்ளுறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து வலியை குறைக்கச் செய்யும். மேலும் வயிற்றைச் சுற்றி இந்த வெந்நீர் ஒத்தடம் அளிப்பதன் மூலம் வயிற்றின் தசைகளை இலகுவாக்கி இரத்தப்போக்கு முழுமையடைய உதவும். இதன் வாயிலாகவும் விரைந்து வலியிலிருந்து விடுபடலாம்.

மாதவிடாய் நேரத்தில் வெந்நீர் மட்டுமல்ல தண்ணீரும் முக்கியம். தேவையான அளவு நீரருந்ததுவதன் மூலம் நீரேற்றத்தில் உடல் தன்னிறைவு பெறும். இதனாலும் வலியின் தன்மை குறைய வாய்ப்பாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவுக் கட்டுப்பாடு கடைபிடிப்பதன் வாயிலாகவும் மாதவிடாய் நேரத்து வலியின் பாதிப்புகளை குறைக்கலாம். மாதவிடாய் காலத்தில் சோர்வு காரணமாக காபி அல்லது மென்பாங்கள் அருந்துவது மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுத்தீனிகளை உண்பது பரவலாக காணப்படுகிறது. காபியில் இருக்கும் காபீன் மற்றும் பதப்படுத்திய உணவுகளில் இருக்கும் அதிகப்படியான உப்பு ஆகியவை உடலின் நீர்த்தேக்கத்துக்கு வித்திடுகின்றன.

இவையே கர்ப்பப்பை சுருங்குதலுக்கு காரணமான ஹார்மோன் சுரப்பை பாதிக்கவும் செய்கின்றன. இவற்றின் விளைவுகள் மாதவிடாய் நேரத்தின் வலியில் பிரதிபலிக்கும். எனவே மாதவிடாய் வலி காரணமாக அவதிபடுவோர், இம்மாதிரியான உணவு ரகங்களை தவிர்ப்பது அவசியம். இந்த வரிசையில் அதிக கொழுப்பு உள்ளடங்கிய உணவுகளையும் தவிர்க்கலாம்.

உண்ண வேண்டியவை

ஒரு குவளை நீரில் அரை ஸ்பூன் வெந்தயம், 2 சிட்டிகை பெருங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகிவற்றோடு சிறு துண்டு இஞ்சியை நசுக்கி கொதிக்கவைத்து வெதுவெதுப்பாக அருந்தலாம். இது தசைகளை இலகுவாக்கி, வலியை குறைத்து, உதரப்போக்கினை சீர் செய்ய உதவும். மேலும், மோரில் சிறிது வெந்தயம், 2 சிட்டிகை பெருங்காயம், இஞ்சி கலந்தும் அருந்தலாம். இந்த மோர் ஆகாரமும் வலி நிவாரணியாக உதவும்.

பொதுவாக பெண் குழந்தைகள் மத்தியில், பழங்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகாரங்களை அதிகம் உட்கொள்ள பழக்க வேண்டும். இரத்தசோகை கண்டவர்களின் மாதவிடாய் அனுபவம் தடுமாற்றங்களுக்கு உரியது. எனவே இளம் பெண்கள் தங்களுக்கு இரத்தசோகை இருக்கிறதா என்பதை அறிந்து அவசியமெனில் அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும்.

வலி தீர்க்கும் அரோமா தெரபி

மாதவிடாய் நேரத்து வலி தீர்க்கும் உபாயங்களில், அரோமா தெரபியை இயற்கை மருத்துவம் பரிந்துரைக்கிறது. ஏராளமான அரோமா எண்ணெய் ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை நேரடியாக பயன்படுத்துவது கூடாது. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்தே பயன்படுத்த வேண்டும். பின்னர் அந்த கலவையில் இரண்டொரு சொட்டுகள், அடிவயிறு, தொடை என வலி கண்ட இடங்களில் தடவலாம். இந்த அரோமா எண்ணெய்களில் லாவண்டர், இலவங்கப்பட்டை, கிராம்பு, மர்ஜூரம் உள்ளிட்டவை பரிந்துரைக்கு உட்பட்டவை.

வேண்டாமே உதாசீனம்

மாதவிடாய் வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாது வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது ஆபத்தானது. இதுவே இதர பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லும். இதுபோலவே, மாதவிடாய் நேரத்து வலி என்பதை ஒட்டுமொத்தமாக உதாசீனம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

சாதாரண வலி என்பதற்கு அப்பால், மாதவிடாய் நேரத்து வலி கூடுதலாக இருப்பதும், தொடர்ந்து நீடிப்பதும் கவனித்தாக வேண்டியவை. உடனடியாக மருத்துவ ஆலோசனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் தீர்வு காண உதவும். இம்மாதிரி வலிகளின் பின்னே கர்ப்பப்பை கட்டிகள் முதல் சினைப்பை நீர்க்கட்டிகள் வரை இருக்க வாய்ப்புண்டு. எனவே மாதவிடாய் வலி என்பதில் அலட்சியமும் கூடாது.

ஆசனம் - மூச்சுப்பயிற்சி - முத்திரை

மாதவிடாய் வலி வந்ததும் நிவாரணத்துக்கு வழி தேடுவதை விட முன்யோசனையுடன் அவற்றை தவிர்க்க யோகப் பயிற்சிகள் உதவும். குறைந்தது ஒரு மாதமேனும் யோகா பயின்றவர்கள், மாத விடாய் நேரத்து வலிகளில் இருந்து விடுபடுவதுடன், கடுமையான தசை பிடிப்புகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். ஒவ்வொரு ஆசனத்திலும், 30 முதல் 60 விநாடிகள் நீடிப்பது சிறப்பான பலனைத் தரும்.

பிராமரி பிராணாயாமம்

ஆசனங்களுடன் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதும் நல்லது. மூச்சுப் பயிற்சிகளில் பிராமரி பிராணாயாமம், நாடி ஷோதன பிராணாயாமம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் வயிறு, நெஞ்சு என உள் அவயங்களுக்கான சிறப்பு மூச்சுப் பயிற்சிகளையும் பழகலாம். வலி இருக்கும்போது நாடி ஷோதன பிராணாயாமம் செய்வதும் பலனளிக்கும். அஸ்வினி முத்ரா, யோனி முத்ரா பழகுவதும் சிறப்பான இயற்கை வழி நிவாரணங்களில் சேரும்.

இப்பயிற்சிகள் அனைத்தையும் வழக்கமாக்கொள்ளும்போது, மன அழுத்தம் குறைதல், உட்கொண்ட உணவை உடலில் எளிதில் கிரகித்தல் உள்ளிட்ட அனுகூலங்கள் சாத்தியமாகும். இந்த இயற்கை வழி நிவாரணங்கள் அனைத்தும் பக்க விளைவுகள் இல்லாதது என்பதோடு, பழகுவதற்கும் எளிமையானது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதோடு, ஒட்டுமொத்த தேக நலனுக்கும் இவை நலம் பயப்பதாகும்.

x