சமத்துவப் பொங்கல் விழாவில் வெடித்த ரூட் தல பிரச்சினை; மாணவர்கள் மோதல்: ஒருவரின் மண்டை உடைப்பு


ரூட் தல பிரச்சினையால் இருத்தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதில் மாணவர் ஒருவரின் மண்டை உடைந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் கல்லூரியை சேர்ந்த 150 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி பாரிஸ் ரூட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழ்பாக்கம் கே.எம்.சி பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து ரோட்டில் ஊர்வலமாக பச்சையப்பன் கல்லூரிக்கு உள்ளே சென்றுள்ளனர்.

ஏற்கெனவே கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழாவில் இருந்த பூந்தமல்லி ரூட்டை சேர்ந்த மாணவர்களுக்கும் திடீரென உள்ளே வந்த திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி ரூட்டைச் சார்ந்த மாணவர்களுக்கும் இடையே கைகலப்பாகி ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி கொண்டனர்.

இதில் அந்த கல்லூரியில் தமிழ் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கும் ஆனந்த என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x