மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அக்கூட்டணியின் எம்.பிக்கள் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
2024 – 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கும், வேளாண் துறைக்கும், ரயில்வே துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பட்ஜெட்டில் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நிதி ஒதுக்கீடு குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணிக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு காரணமாக உள்ள ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை அறிவித்ததுடன் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து விட்டு மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இந்த இரண்டு மாநிலங்களுக்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று காலை டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.