தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விகிதங்கள்! - நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், நியூ டாக்ஸ் ரீஜிம் எனப்படும் புதிய வரிவிகித முறையில், தனிநபர்களுக்கான வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு நிலைக்கழிவு ரூ.75,000 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவித்த நிதியமைச்சர், அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை பூஜ்ய சதவீதம் என்ற விகிதம் மாற்றமின்றி தொடரும். அதாவது, வரி இல்லை. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ள வருமானத்துக்கு 30 சதவீதம் என வரி விதிக்கப்படுகிறது. இது, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.
வேளாண் துறைக்கு எவ்வளவு? - வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மைக்கு தேவை அடிப்படையிலான உயிரி இடுபொருள் மையங்கள் 10,000 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விலக்குகள், வரி குறைப்புகள் என்னென்ன? -புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும். சூரிய எரிசக்தி உற்பத்திக்கான உபரி பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க பரிசீலிக்கப்படுகிறது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் கல்விக் கடன்: அரசு திட்டங்கள், கொள்கைகளின் கீழ் பயன்பெற தகுதிபெற இயலாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரை உயர் கல்விக் கடன் உதவி வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சதவீத வட்டியில், ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக இதற்கான மின்னணு ரசீதுகள் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5,000 படியுடன் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப்! -பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்குவதற்கு அரசு விரிவான திட்டத்தை தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்குவதாக இந்த திட்டம் இருக்கும். நிகழ் நிலை வணிகச் சூழல், மாறுபட்ட தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் 12 மாத பயிற்சி பெறுவார்கள். இந்த இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6,000 என்பதுடன் மாதந்தோறும் அனுபவ பயிற்சிப் படியாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவு ஏற்பதுடன் அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, பிஹாரிக்கு சிறப்பு நிதி! -ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். பிஹாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும். பிஹாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் ஈர்க்கும் அறிவிப்புகள் என்னென்ன? - முத்ரா கடன் தொகை தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்; பிரதமரின் வீட்டு வசதி திட்டம் – நகர்ப்புறம் 2.0-ன் கீழ், ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும்; புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, அனைத்து தரப்பையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி கைவிடப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெரு நிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள், மத்திய பட்ஜெட்டில் கவனம் ஈர்த்துள்ளன.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்: ஸ்டாலின்: “பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில், அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதை புறக்கணிக்கப் போகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இண்டிய கூட்டணி தலைவர்களின் கருத்துகள்: “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் கூறுகையில், “பட்ஜெட்டில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “அவர்கள் அரசைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். ஆந்திராவுக்கும் பிஹாருக்கும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், பிரதமர்களை வழங்கும் உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் ஏதாவது உள்ளதா? விவசாயிகளின் விளைபொருள்கள் மற்றும் வருமானங்களுக்கான திட்டங்கள் ஏதாவது பட்ஜெட்டில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், “ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட் இது” என்று சாடியுள்ளார்.
“இந்த முறை தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கும் நிலையிலும், சந்திரபாபு நாயுடுவால் அமராவதிக்கான சிறப்பு நிதியை மட்டுமே பெற முடிந்திருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேலி செய்துள்ளார்.
தமிழக தலைவர்களின் கருத்துகள்: “இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடியதாக மத்திய பட்ஜெட் இல்லை. குறிப்பாக, தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
“மத்தியில் பாஜக அரசு நிலைப்பதற்காக பிஹார், ஆந்திரா மாநிலங்களின் ஆளுங்கட்சிகளை குளிர வைக்கவும், வெகு விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் வர இருக்கும் மாநிலங்களில் தமது கட்சிக்கு வாக்குகளை ஈர்க்கவும், வழக்கம் போலவே கார்ப்பரேட்டுகளுக்கும் பெரு வணிக குழுக்களுக்கும் உதவி செய்யவும் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை இது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
“நிர்மலா சீதாராமன் வாசித்த நிதிநிலை அறிக்கையில் வழக்கமாக வாசிக்கப்படும் தமிழ்நாடு என்ற வார்த்தையும் இல்லை, பாரதியார் கவிதைகளோ, திருக்குறளோ இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் கபட நாடகத்தை மத்திய பட்ஜெட் அம்பலமாக்கியுள்ளது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
“அனைத்து தரப்பு மக்களுக்குமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“ஒட்டுமொத்தமாக, மத்திய பட்ஜெட் ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்த உருப்படியான முன்னேற்றத்தையும் கொண்டு வராது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
“பிஹார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார்,” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
“நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.