டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பிஹார் மற்றும் ஆந்திராவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்குவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தங்கள் மாநிலமும் புறக்கணிக்கப்பட்டதாக கூறி 3 மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர்களாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.