புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியும், மற்றொரு வழக்கறிஞரை வாதாட விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை வெளியேற்ற பாதுகாவலருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு மற்றும் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்ட அத்தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா தனது வாதங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டு பேசினார். இதையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் நெடும்பராவை, இடையூறு செய்ய வேண்டாம். அவர் நிறைவு செய்ததும், நீங்கள் உங்கள் வாதங்களை முன் வையுங்கள் என அறிவுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் நெடும்பரா, தான் நீதிமன்றத்தில் மிக மூத்த வழக்கறிஞர் என தெரிவித்தார். இதையடுத்து "நெடும்பரா தயவு செய்து அமருங்கள் அல்லது நீங்கள் வெளியேற்றப்பட நேரிடும்" என தலைமை நீதிபதி எச்சரித்தார். மேலும், "நீதிமன்றத்தில் விளையாடாதீர்கள், நான் நீதிமன்றத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறேன்" என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
இதையடுத்து வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, தாமாகவே நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறேன் என பதிலளித்து, தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிக்கொண்டே இருந்தார். இதையடுத்து, "பாதுகாவலரை அழைத்து அவரை வெளியேற்றுங்கள்" என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது.” என்றார். இதற்கும் வழக்கறிஞர் நெடும்பரா, தான் கடந்த 1979ம் ஆண்டு முதல் நீதித்துறையை பார்த்து வருவதாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கும், வழக்கறிஞர் நெடும்பராவுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போதும் தன்னை நோக்கி கத்தக் கூடாது என, வழக்கறிஞர் நெடும்பராவுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.