‘விதிமீறல் நடந்துள்ளது; புனிதத்தன்மை பாதிக்கப்படவில்லை’ - நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!


டெல்லி: நடைபெற்று முடிந்த இளநிலை நீட் தேர்வில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், ஆனால் ஒட்டுமொத்த தேர்வின் புனிதத் தன்மை பாதிப்படைந்ததற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2024-25 கல்வியாண்டுக்கான மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்டது. இதில் 13 லட்சம் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டம் நடைபெற்றிருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. மேலும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதும் பெரும் சர்ச்சை ஆனது.

இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பின்னர் தீர்ப்பை வாசித்தனர். ”நீட் தேர்வு முறையில் விதிமீறல் நடந்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தேர்வின் புனிதத்தன்மை பாதிப்படைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இரண்டு இடங்களில் நடந்த வினாத்தாள் கசிவால் 155 பேர் பயனடைந்துள்ளனர் என்பது உண்மை. எனவே மறுத்தேர்வு நடத்த உத்தரவிட முடியாது.” எனக்கூறி உத்தரவிட்டனர்.

x