மத்திய பட்ஜெட் 2024: சிபிஐக்கு ரூ. 951 கோடி நிதி ஒதுக்கீடு!


புது டெல்லி: மத்திய பட்ஜெட்டில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் நாட்டின் முதன்மை விசாரணை அமைப்பான மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மத்திய அரசு ரூ.951 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 1.79 சதவீதத்துக்கும் சற்று குறைவாகும்.

2024-25ம் நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் வெளியிடப்பட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளில் சிபிஐ, அதன் விவகாரங்களை நிர்வகிக்க ரூ.951.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 - 24ம் ஆண்டில் சிபிஐ-க்கு மத்திய அரசு ரூ.968.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

அரசு ஊழியர்கள், தனியார் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கடுமையான குற்றங்களின் பிற வழக்குகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் விசாரணை மற்றும் வழக்குத் தொடர சிபிஐ செலவினங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ-ன் பயிற்சி மையங்களை நவீனமயமாக்குதல், தொழில்நுட்ப மற்றும் தடயவியல் பிரிவுகளை நிறுவுதல், விரிவான நவீனமயமாக்கல் மற்றும் நிலம் வாங்குதல் அல்லது சிபிஐக்கு அலுவலகம் அல்லது குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் இதில் அடங்கும்.

x