கந்துவட்டி கேட்டு வியாபாரியை மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை சாலிகிராமம் தசரதபுரம் காவேரி ரங்கன் தெருவை சேர்ந்த ஞானசேகர் என்பவர் அதே பகுதியில் எல்.கே.வி ஸ்டோர் என்ற பெயரில் பவுர் டூல்ஸ் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெங்கடேஷ் என்பவரிடம் 20,000 ரூபாய் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை தினமும் 200 ரூபாய் விதம் 100 நாட்களில் கட்டி முடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஞானசேகரன் சபரிமலைக்கு சென்றதால் குறிப்பிட்ட நாளில் பணம் கட்ட முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டி வெங்கடேஷ் நேற்று இரவு ஞானசேகர் வாட்ஸ்அப் எண்ணுக்கு கொச்சையாக குறுஞ்செய்தி அனுப்பியதுடன், கடைக்கு நேரடியாக சென்று ஞானசேகர் மகனிடம் பணம் என்னடா ஆச்சு. உங்க அப்பனுக்கு அசிங்கமாக வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்பியும், பதில் இல்லை என கேட்டுள்ளார்.
உடனே ஞானசேகர் மகன், `அப்பா சபரிமலைக்கு சென்றுவிட்டு இரவு தான் வீடு திரும்பியதாகவும் நாளைக்கு அப்பா பணம் தருவாங்க என்று சொல்ல', 'இப்பவே பணத்தை கொடு' என கேவலமாக திட்டி அடிக்க பாய்ந்துள்ளார். அந்த நேரம் பார்த்து தற்செயலாக அங்கு வந்த ஞானசேகர், 'என் மகனிடம் கேட்காதீங்க சார். அவனுக்கு ஒன்னும் தெரியாது. நான் நாளைக்கு பணம் தரேன். நீங்க போங்க சார்' என்று கூறியும், 'இல்லடா, இப்பவே பணத்தை கொடு. இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன்' என்று கூறி பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த வியாபாரிகள் ஓடிவந்து தடுத்து நிறுத்தி வெங்கடேஷிடம் சண்டையிட்டதால் அங்கிருந்து அவர் பைக்கில் தப்பி சென்றார்.
இது குறித்து ஞானசேகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.