மத்திய பட்ஜெட்டில் தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் தவிர்ப்பு: ரயில்வேக்கு அறிவிப்புகள் இல்லை!


டெல்லி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ், தமிழ்நாடு ஆகிய வார்த்தைகள் ஒரு இடத்தில் கூட இடம்பெறாதது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

18வது மக்களவை பொறுப்பேற்ற பின்னர், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. மத்திய அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு புதிய அறிவிப்புகளுடன், பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தொகுப்புகளும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிற்கென பிரத்யேக அறிவிப்புகளோ அல்லது புதிய திட்டங்களோ அல்லது ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளோ பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், திருக்குறள் மற்றும் பண்டைய தமிழ் இலக்கிய நூல்களில் இருந்து குறிப்புகள் மேற்கோள் காட்டப்படும். ஆனால் இந்த முறை அது போன்ற மேற்கோள்களும் இடம்பெறாததோடு, ’தமிழ்’, ’தமிழ்நாடு’ என்ற வார்த்தைகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

மேலும் ரயில்வேக்கு என கடந்த 2016ம் ஆண்டு வரை தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பாஜக ஆட்சியில், கடந்த 1924ம் ஆண்டு முதல் 92 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த தனி பட்ஜெட் முறை கைவிடப்பட்டு, மத்திய பட்ஜெட்டுடன் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், ரயில்வேக்கு என பெரிதாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் ரயில்வே என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய ரயில் தடங்கள், ரயில்வே பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

x