ஒவ்வொரு மாதமும் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு கூரை சூரிய மின் தகடுகளை நிறுவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசி வருகிறார். அதில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அப்போது, "பிரதம மந்திரி சூர்யகர் முஃப்ட் பிஜிலி யோஜனாட திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு கூரை சூரிய மின் தகடுகளை நிறுவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "அசாம், இமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உதவும். பீகார் மாநிலத்தில் மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைத்து தரப்படும் .வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பீகார் மாநிலத்தில் மட்டும் 3 அதிவேக எக்ஸ்பிரஸ் சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அறிமுகம் செய்யப்படும். பன்னாட்டு நிதியகங்கள் மூலம் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு கூடுதல் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்" என்றார்.