பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவிற்கு ரூ.41 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு


பீகார் மற்றும் ஆந்திராவிற்கு சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து 41ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில், பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்," 1 கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சார வசதி அமைக்கப்படும். கம்பெனிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த வழக்குகளை கையாள புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். 12 தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஐபிசி( IBC) என்ற திவால் சட்டத்தின் கீழ் 1000-க்கும் மேலான நிறுவனங்களின் வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் ரூ. 3.3 லட்சம் கோடி அளவிலான கடன் மீட்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பீகாரின் கயா முதல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி மையம் உருவாக்கப்படும்" என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து 41ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

x