ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் பயங்கர தீவிபத்து: மாலுமி ஒருவர் மாயம் என தகவல்


மும்பை: கப்பல் தளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி மாலுமி ஒருவர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 1994ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு, 2000 ஆவது ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததோடு, அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல், மத்திய தரைக்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளிலும் இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது.

450 அதிகாரிகள் வரையிலும் இந்த கப்பலில் தங்கி இருந்து பணியாற்ற முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக இந்த கப்பல் மும்பையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு அந்த கப்பலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை கப்பலில் பரவியிருந்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தீவிபத்து காரணமாக ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பல் மோசமாக சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களின்படி ஒரு பக்கமாக இந்த கப்பல் சாய்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு இளம் மாலுமி மாயமாகி இருப்பதாகவும், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

x