டெல்லி: பிஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத்தொடராக அறிவிக்கப்பட்டது. இன்று தொடங்கி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நாளை 2024-25 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், பாஜகவின் கூட்டணியில் பங்கு பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பிஹார் மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும், சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த கோரிக்கைகளை, தற்போது மத்திய அரசில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கட்டாயம் பெறும் என அக்கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் உறுதியாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டல் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது எனவும், சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதாக கூறிவந்த நிதீஷ் குமார், உடனடியாக பதவி விலக வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
இதனிடையே மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான வழிவகைகள் எதுவும் அரசியலமைப்பில் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.