இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி - புதுச்சேரியில் புதிய அறிவிப்பு


புதுச்சேரி: இந்த மாதம் முதல் சிவப்பு ரேஷன் அட்டைதாரருக்கு இலவச அரிசி தரப்படும். மஞ்சள் அட்டை வைத்திருந்தால் ரூ.1-க்கு 1 கிலோ அரிசி தரவுள்ளோம் என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தனது தொகுதியில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணிகளை இன்று தொடக்கி வைத்தார். அப்போது பெண்கள் அவரிடம் கோரிக்கைகளை வைத்தபோது, “முன்பு பத்து நாட்கள்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை தரப்பட்டு வந்தது. தற்போது 95 நாட்கள் வரை வேலைத் திட்டத்தில் பணி தரப்படுகிறது. மோடி மட்டும்தான் நூறு நாள் வேலை தருகிறார். தற்போது ரூ.319 சம்பளம் தரப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் வேலை செய்யுங்கள்” என்றார்.

அப்பணியைத் தொடக்கி வைத்த பிறகு கிராம மக்களிடம் பேரவைத் தலைவர் கூறுகையில், “ரேஷனில் இந்த மாதம் முதல் அரிசி போட போகிறோம். சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தால் 20 கிலோ இலவச அரிசி தரவுள்ளோம். மஞ்சள் அட்டை வைத்திருந்தால் கிலோ ரூ.1 வீதம் 20 கிலோ விநியோகிக்கப்படும். அரிசி மட்டுமில்லாமல் துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவையும் ரேஷனில் தரவுள்ளோம்” என பேரவைத் தலைவர் கூறினார்.

இதனிடையே, “ரேஷனில் விரைவில் இலவச அரிசி வழங்கப்படும். ஆளுநரின் ஒப்புதல் பெற்றுள்ளோம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி இன்று பேசும்போது, “இலவச அரிசி ரேஷனில் விரைவில் வழங்கப்படும். சொன்னதுபோல் தருவோம். கூடுதலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியுள்ளோம். அரிசி டெண்டர் போட்டுதான் தர முடியும். அதன் பிறகுதான் தெரிவிக்க முடியும். ரேஷன் கடைகள் மூலம், கூட்டுறவுத் துறை டான்பெட் மூலம் தரவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

x