முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு: ஆளுநர் விசாரணைக்கு வலியுறுத்தும் நாராயணசாமி


புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்கள் மீதான பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது, "புதுச்சேரியில் முதல்வராக நான் இருந்தபோது அப்போதைய ஆளுநர் கிரண்பேடி துணையுடன் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்தது. அதேபோல் இப்போது கடந்த மாதம் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் திட்டக்குழு கூட்டம் நடத்தி பட்ஜெட்டுக்கான நிதியை இறுதி செய்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பிய கோப்புக்கு இதுவரையிலும் ஒப்புதல் வழங்கவில்லை.

கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலத்திற்கே மத்திய அரசு இப்படி செய்தால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எப்படி ஒத்துழைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. யார் ஆண்டாலும் புதுச்சேரியை புறக்கணிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் காரணமாக, 66 பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு 32 பணிகள் தான் நடந்துள்ளது. மொத்தத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட்டு விட்டது. குடிநீர் வசதி, சாலை மேம்பாடு உள்ளிட்ட முக்கிய பணிகளை அரசு கைவிட்டு விட்டது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அரசு படுதோல்வி அடைந்த பிறகும் இவர்கள் திருத்திக் கொள்ளவில்லை. மாறாக ஊழல் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளனர், இதனால் புதுச்சேரி அரசு இயந்திரம் முடங்கி உள்ளது. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நான் சுமத்தி வந்தேன். தற்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

புதுவை அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் புரையோடிப் போயுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்கள் புரோக்கர்கள் மூலம் செயல்படுகிறது என்றும் அங்காளன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக துணை நிலை ஆளுநர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

முதல்வர், அமைச்சர்கள் அறையில் இடைத்தரகர்கள் உள்ளனர். அவர்கள் ஒப்புதலாகும் கோப்புகளை பதுக்கி, சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொண்டு லஞ்சம் பெறுகின்றனர். இடைத்தரகர்கள் மீதான குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் அவர்களை முதல்வர் தனது அறையிலிருந்து வெளியேற்றவில்லை. இதன் மூலம் முதல்வர் அனுமதியுடன்தான் ஊழல் நடப்பது உறுதியாகியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

x