புதுடெல்லி: 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய விரிவான மதிப்பாய்வை பொருளாதார ஆய்வறிக்கை வழங்குகிறது. இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் (சிஇஏ) வழிகாட்டுதலின் கீழ் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அரசின் பொருளாதார செயல்திறன், முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கை முன் முயற்சிகள் பற்றிய தகவல்களை இது வழங்குகிறது. மேலும், வரவிருக்கும் நிதியாண்டிற்கான முன்னறிவிப்பை பொருளாதார ஆய்வறிக்கை வழங்குகிறது.
இது கொள்கை முடிவுகளை வழிநடத்துவதற்கும், பொருளாதார உத்திகளை வடிவமைப்பதற்கும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. இந்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "ஏற்றுமதியை பாதிக்கக்கூடிய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 முதல் 7 சதவீதம் வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளன என்ற உண்மையை உணர்ந்து, அபாயங்கள் சமநிலையுடன், 6.5 - 7 சதவீதம் என்ற உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சியை இந்த ஆய்வு கணித்துள்ளது.” என்றார். இது, 2024-25ம் ஆண்டிற்கு முந்தைய நிதியாண்டில் கணிக்கப்பட்ட 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக உள்ளது. மார்ச் 2025ல் முடிவடையும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.