ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை நீக்கம்: காங்கிரஸ் விமர்சனம்


புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடையை நீக்கி, மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்ட அரசாணையை சமூகவலைதளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடையை நீக்கி, மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்ட அரசாணை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர்களால் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இது தொடர்பான அரசாங்க உத்தரவின் உண்மைத்தன்மையை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.

எனினும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா, அதே உத்தரவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அமித் மால்வியா தனது பதிவில், “58 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமான உத்தரவை மோடி அரசு திரும்பப் பெற்றுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், கடந்த 9ம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து, 1948 பிப்ரவரியில் சர்தார் படேல், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார். அதைத் தொடர்ந்து, நல்ல நடத்தைக்கான உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்தத் தடை திரும்பப் பெறப்பட்டது. இதற்குப் பிறகும் கூட ஆர்எஸ்எஸ் நாக்பூரில் (ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில்) மூவர்ணகொடியை பறக்கவிடவில்லை.

1966ல் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் 4ம் தேதிக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ்-ஸுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு அம்பலப்பட்டுவிட்டது. கடந்த 9ம் தேதி அன்று, 58 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இந்த தடை நடைமுறையில் இருந்தது.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

x