வளர்ச்சியடைந்த பாரதம் இலக்கை அடைய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்


புதுடெல்லி: கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, 2047-ம் ஆண்டில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைய தேசத்துக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கையையும், நாளை 2024-25ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, 2047-ம் ஆண்டில் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைய தேசத்துக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும். 2029 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ஆறு மாதங்கள் வரை அரசியலுக்கு சிறிதும் இடமளிக்கக் கூடாது.

நமது ஜனநாயகத்தின் பெருமைமிக்க பயணத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு முக்கியமான இடமாகும். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஓர் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நமது பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கான நமது பயணத்துக்கு ஒரு திசையை அமைக்கும். மேலும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' திட்டத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும்.

நாட்டின் நேர்மறையான முடிவுகள் உச்சத்தில் உள்ளன. எனவே, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாட்டிற்காக ஒன்றுபட்ட மற்றும் உண்மையான நோக்கத்துக்காக போராடுவது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும். சில எம்பி-க்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக அந்தந்த தொகுதிகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

சில கட்சிகள் தங்கள் தோல்விகளை மறைக்க நாடாளுமன்றத்தின் நேரத்தை பயன்படுத்திக் கொண்டன. கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நான் பேசுவதை எதிர்க்கட்சிகள் தடுக்க முயன்றன. இத்தகைய தந்திரங்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை.” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

x