ஹரியாணாவில் உள்ள நூஹ் நகரில் இன்று நடைபெறும் பிரஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரையை முன்னிட்டு இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநிலம், நூஹ் நகரில் ஆரவல்லி பள்ளத்தாக்கில் பழமையான நாலேஷ்வர் சிவன் கோயில் உள்ளது. இங்கிருந்து இன்று காலை 10 மணியளவில் பிரஜ் மண்டல் யாத்திரை தொடங்குகிறது. இங்குள்ள நாலேஷ்வருக்கு ஹரித்வாரில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் பயணத்தை பக்தர்கள் தொடங்க உள்ளனர். இங்கிருந்து புறப்பட்டு ஃபிரோஸ்பூர் ஜிர்காவின் ஜிர் கோயில் வழியாக மாலை 5 மணிக்கு புனஹானாவில் உள்ள சிங்கார் கிராமத்தின் ராதா கிருஷ்ணா கோயிலைச் சென்றடையும்,
கடந்த ஆண்டு பிரஜ்மண்டல் யாத்திரையின் போது ஏற்பட்ட வன்முறையைக் கருத்தில் கொண்டு, நிர்வாகம் இம்முறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி நூஹ் மாவட்டத்தில் ஒரு கும்பல் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் வன்முறை வெடித்தது. இதில் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர். மேலும் போலீஸார் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இதனால் இன்று யாத்திரை நடைபெறும் வழித்தடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நூஹ் நிர்வாகம் 24 மணிநேரம் இணைய சேவையை நிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு இன்று மாலை 6 மணி வரை தொடரும்.
மேலும் யாத்திரை முடியும் வரை மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நூஹ் மாவட்ட எஸ்பி விஜய் பிரதாப் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளில்லா விமானங்கள் மூலம் வீடியோ கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாய்ப்படை மற்றும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்..