சிறையில் கேஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேஜ்ரிவால் தற்போது திஹார் சிறையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து டெல்லி துணை நிலை ஆளுநரின் முதன்மை செயலாளர், டெல்லி தலைமைச் செயலகத்துக்கு கடந்த 20-ம் தேதி கடிதம் அனுப்பினார்.

அதில், கேஜ்ரிவால் வேண்டுமென்றே சாப்பிட மறுக்கிறார். கடந்த ஜூன் 6-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை குறைந்த கலோரி கொண்ட உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார். அவரது உடல் எடை 2 கிலோ குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையோடு மத்தியில் ஆளும் பாஜக அரசு விளையாடுகிறது. ஆரம்ப காலத்தில் கேஜ்ரிவால் வேண்டுமென்றே அதிக இனிப்புகளை சாப்பிடுகிறார். இதன்மூலம் சர்க்கரை அளவை அதிகரித்து ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினர்.

இப்போது கேஜ்ரிவால் சாப்பிட மறுக்கிறார் என்று டெல்லி துணைநிலை ஆளுநர் கூறுகிறார். சிறையில் கேஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடக்கிறது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவரது உடல் எடை 8 கிலோ வரை குறைந்துவிட்டது. இது ஆபத்தானது. இதேநிலை நீடித்தால் அவர் கோமாவுக்கு செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது. இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்தார்.

x