யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா


புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி 2023-ம் ஆண்டு மே 16-ம் தேதி பதவியேற்றார். வரும் 2029 மே 15-ம் தேதி இவரது பதவிக்காலம் முடிகிறது. இந்நிலையில், மனோஜ் சோனி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.

மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர்தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா என தகவல் வெளியாகவில்லை.

ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொய் தகவலை கூறி பணியில் சேர்ந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவரது பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டதுடன் அவர் மீது யுபிஎஸ்சி சார்பில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். எனினும், பூஜா விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

x