டெல்லியில் வெட்டி சாய்க்கப்பட்ட 1,100 மரங்கள்: பாஜக அலுவலகம் அருகே ஆம் ஆத்மி போராட்டம்


புதுடெல்லி: சத்பாரி பகுதியில் 1,100 மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், டிடியு மார்க்கில் உள்ள பாஜக அலுவலகம் அருகே இன்று போராட்டம் நடத்தினர்.

தெற்கு டெல்லி சத்பாரி பகுதி மலை முகட்டில் 1,100 மரங்கள் வெட்டப்பட்டதாக கூறி, டிடியு மார்க் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் அருகே, ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் முகமூடி அணிந்திருந்த போராட்டக்காரர்கள், மரங்கள், ரம்பம் போன்றவற்றின் மாதிரிகளை கொண்டு, மரங்கள் வெட்டப்பட்டதை சித்தரிக்கும் வகையில் மனித சங்கிலி போன்று வரிசையாக நின்றனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் துணை நிலை ஆளுநரே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டியதற்கு காரணம் என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். 1,100 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

துணை நிலை ஆளுநரின் வாய்மொழி உத்தரவின் பேரில் டெல்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) சாலை அகலப்படுத்தும் திட்டத்துக்காக இவ்வளவு மரங்களை வெட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதே நேரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகே மரங்கள் வெட்டப்பட்டதாக பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளது.

x