கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தாவில் ஊழல் புகார் - பாஜகவால் பரபரப்பு


பெங்களூரு: மூடா ஊழல் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது பாஜக தலைவர் என்.ஆர்.ரமேஷ் 400-க்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தலைவர் என்.ஆர். ரமேஷ் லோக் ஆயுக்தாவில் இன்று புகார் செய்துள்ளார். நிதியமைச்சராகவும், துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்தபோது நில அபகரிப்பு, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) ஊழல் போன்றவற்றில் சித்தராமையா ஈடுபட்டதாக 400 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் என்.ஆர்.ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "1997-98-ல் ஜே.எச்.படேல் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த சித்தராமையா, தேவனூர் மூன்றாவது பேரூராட்சியை மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் ( மூடா) ஒப்படைக்கும் அறிவிப்பை வெளியிட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். 2004-05-ல் தர்மசிங் அரசில் துணை முதல்வராக இருந்த சித்தராமையா, விஜயநகர் 2 மற்றும் 3வது பேரூராட்சிகளில் மாற்று மனைகள் என்ற பெயரில் சுமார் 39 ஆயிரம் சதுர அடியில் 14 மனைகளை உருவாக்க அனைத்து விதிகளையும் மீறினார். பின்னர் 2022-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த 14 மனைகளையும் தனது மனைவி பார்வதி பெயரில் பதிவு செய்தார்.

தேவனூரில் ஒரு பிளாட் ரூ.6 கோடியும், விஜயநகரில் உள்ள 14 பிளாட்டுகளின் விலை விலை ரூ.50 முதல் 60 கோடியாகும். செல்வாக்கு மிக்க பதவியில் இருந்துகொண்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சித்தராமையா ஊழலில் ஈடுபட்டுள்ளார். எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று லோக் ஆயுக்தாவில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.

x