புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரம், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வை நிகழாண்டு நாடு முழுவதும் 571 நகரங்களில் 4750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் இத்தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் உள்பட 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது என்பவை உள்ளிட்ட பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த முறைகேடுகள் தேசிய அளவில் பரவலாக நடைபெறவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக ஜூலை 20ம் தேதி பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இன்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://neet.ntaonline.in/frontend/web/common-scorecard/index என்ற வலைதளத்தில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.