டெங்கு பரவும் நிலையில் வேலைநிறுத்தம்: கர்நாடகா டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு


கர்நாடகாவில் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பருவமழை காரணமாக கனமழை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொற்று நோய்களும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளன. டெங்கு, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊதிய உயர்வு கோரிக்கை பரிசீலிக்கப்படாததால் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக கர்நாடக ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை மோசமாகும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் சங்கம் கூறுகையில், " உதவித்தொகை உயர்வு குறித்து நீண்ட நாட்களாக மாநில அரசு மவுனம் காத்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் போராட்டத்தை தொடங்குவது தவிர்க்க முடியாதது" என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," ஓய்வு எடுக்காமல் 24 முதல் 48 மணி நேரம் உழைத்தாலும் உதவித்தொகை குறைவாக கிடைக்கிறது. அண்டை மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் மற்றும் சில மாநிலங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உதவித்தொகையை அதிகரிக்கின்றன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கர்நாடகாவில் எங்களுக்குக் கிடைக்கும் உதவித்தொகை மிகவும் குறைவு. கர்நாடகாவில் இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணமும் அதிகம்.

மேலும், நாங்கள் போராட்டம் நடத்துவதால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம். ஆனால், எங்களின் கோரிக்கையை ஆளுங்கட்சியிடம் கேட்க இந்த போராட்டம் அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றனர். இந்தப் போராட்டம் எப்போது நடத்தப்படும் என்று சங்கம் தெரிவிக்கவில்லை.

x