ஹரியாணாவில் சட்டவிரோத சுரங்க வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார் கைது!


சண்டீகர்: ஹரியாணாவில் சட்டவிரோத சுரங்கத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் சோனிபட் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

ஹரியாணா மாநிலம், யமுனாநகர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் குத்தகைக் காலம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாறைகள், சரளை மற்றும் மணல் ஆகியவை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஹரியாணா காவல் துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் மற்றும் ராயல்டி, வரிகளை எளிமையாக்கவும், சுரங்கப் பகுதிகளில் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் 2020ம் ஆண்டில் ஹரியாணா அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் போர்ட்டலான 'இ-ராவண்' திட்டத்தில் நடந்த மோசடி குறித்தும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில சபாநாயகர் கியான் சந்த் குப்தாவிடம் அளித்தார். அப்போது, தனிப்பட்ட காரணங்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கு வந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றவற்றை ராஜினாமாவுக்கு காரணமாக தெரிவித்தார்.

ஆனால் அவரது கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதாக சபாநாயகர் கியான் சந்த் குப்தா உறுதியளித்ததால், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் சட்டவிரோத சுரங்கத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் சோனிபட் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டபோது, துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்தனர்.

x