ஆந்திராவில் 45 நாட்களில் 36 படுகொலைகள்: ஜெகன்மோகன் அதிர்ச்சி தகவல்


ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 45 நாட்களில் 36 படுகொலைகள் நடந்திருப்பதாக முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் ,பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞரணி தலைவர் ரஷீத் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 45 நாள் ஆட்சியில் ஆந்திராவில் 36 படுகொலைகள் நடந்துள்ளன. மேலும் 300-க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள், 560 இடங்களில் தனியாரின் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்துள்ளன.

இவை மட்டுமின்றி 490 அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்தப்பட்டுள்ளன. எனவே ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி வரும் 24-ம் தேதி டெல்லியில் ஒய்எஸ்ஆர். கட்சியின் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் தர்ணா போராட்டம் நடத்துவார்கள். இதன் பின் ஆந்திரா மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புகார் அளிக்கப்படும்" என்றார்.

x