கொட்டும் கனமழையில் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற மரத்தில் ஸ்ட்ரெச்சர் செய்து 5 கி.மீ தூரம் கிராமமக்கள் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல வெள்ளப்பெருக்கால் பல தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம், இணைய தளசேவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்ற மரத்தில் ஸ்ட்ரெச்சர் செய்து 5 கி.மீ தூரம் கிராம மக்கள் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் கானாபுரா தாலுகாவின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அங்கவோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷதா(36). இவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தார். அந்த கிராமத்தில் சாலை வசதியோ, பாலமோ, செல்போன் நெட்வொர்க் வசதியோ கிடையாது. ஆனாலும், அந்த பெண்ணைக் காப்பாற்ற கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் முன் வந்தனர். மரத்தில் ஸ்ட்ரெச்சர் செய்து அந்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு கனமழையின் 5 கி.மீ தூரம் கிராம மக்கள் நடந்துள்ளனர்.
பரோக் சாலையில் உள்ள சிக்கலே வனத் துறை சோதனைச் சாவடிக்கு ஹர்ஷிதாவை கொண்டு சென்ற கிராம மக்கள், அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சென்று செல்போன் நெட்வொர்க் பகுதியிலிருந்து 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். இதையடுத்து ஜம்போதியில் இருந்து ஆம்புலன்ஸ் நோயாளி இருக்கும் இடத்திற்கு வந்தது, முதலில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி விழுந்த ஹர்ஷதாவுக்கு முதலுதவி அளித்து பின்னர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹர்ஷிதாவிற்கு மட்டுமல்ல, கானாபுரா தாலுகாவின் வன விளிம்பில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராம மக்களின் நிலையும் இது தான் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். எனவே, தங்கள் தாலுகாவிற்கு, அடிப்படை வசதிகளை அரசு விரைந்து செய்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.