உலக அளவில் ‘விண்டோஸ்’ பாதிப்பு முதல் யோகி ‘உத்தரவு’ சர்ச்சை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் முடங்கியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால், விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் எனக் காண்பிக்கிறது. மேலும், அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது" என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.Crowdstrike என்பது சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆகும். கிளவுட் அடிப்படையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் இந்த Crowdstrike, விண்டோஸ் சாப்ட்வேரில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி, ரியல் டைமில் பாதுகாப்பு சிக்கல்களை கிளவுட் அடிப்படையிலான ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இந்த நிறுவனம் விண்டோஸில் தீர்வுகளை வழங்குகிறது.

இந்நிலையில், இந்த Crowdstrike-ன் சமீபத்திய அப்டேட்டில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் எனப்படும் Blue Screen of Death எரர் இணைக்கப்பட, அது உலகம் முழுவதும் விண்டோஸ் சேவை பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்ந்தது. Crowdstrike-ன் கடைசி அப்டேட் வியாழக்கிழமை இரவு வந்துள்ளது. இதன் எரர், Falcon சென்சாரில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனை Crowdstrike நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், "இது சைபர் தாக்குதல் கிடையாது. எங்கள் குழுக்கள் சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவோம். பிரச்சினையை கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், நிரந்தர தீர்வு செயல்படுத்தப்படும் வரை பயனர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று அதன் நிறுவனர் ஜார்ஜ் கர்ட்ஸ் தனது எக்ஸ் தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

விண்டோஸ் செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய விமான சேவையிலும் சேவை பாதிப்பின் தாக்கம் உள்ளது. வின்டோஸ் சிக்கலால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1,000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 170 விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 90% விமானங்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு வரவேண்டிய 15 விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஆகியுள்ளது.

விண்டோஸ் சேவை பாதிப்பால் விமான நிலையங்களிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன. வின்டோஸ் சாப்டவேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுத்ததால் விமானங்கள் புறப்பட தாமதமாகின.

வங்கிகள், விமான நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிவி, ரேடியோ மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிகங்கள் என உலகம் முழுவதும் விண்டோஸ் சாப்ட்வேர் குளறுபடியால் பாதிப்பை சந்தித்தன.

ஜாபர் சாதிக்கிடம் மேலும் 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுச் சான்றிதழ்: ஐகோர்ட் முக்கிய உத்தரவு: ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மாற்றுச் சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது 'கட்டண பாக்கி உள்ளது' என்றோ, அல்லது 'கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ' குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படையச் செய்யக் கூடாது. மாற்றுச் சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கான ஓர் ஆவணமேயன்றி, அது பெற்றோர்களிடமிருந்து கட்டண பாக்கியை வசூலிக்கும் கருவி அல்ல.

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

மழைக்காலக் கூட்டத் தொடரில் 6 புதிய மசோதாக்கள்? - நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆறு புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, பாரதிய வாயுயன் விதேயக் மசோதா, காபி மசோதா, ரப்பர் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

அஞ்சலை கைது: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

“கொலைக்களமாக மாறும் தமிழகம்” - இபிஎஸ்: “திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூஜா மீது வழக்குப் பதிவு: குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக புகாருக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கையின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“என் பக்கம் கடவுள் இருந்தார்” - ட்ரம்ப் உருக்கம்: “இன்று நான் இங்கே நிற்க எல்லாம் வல்ல இறைவனின் அருளே காரணம். அது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். என்னைச் சுற்றி ரத்தமாக இருந்தபோதும் நான் அந்த நொடியில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனெனில் கடவுள் என் பக்கம் இருந்தார்” என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னரான முதல் உரையில் தெரிவித்துள்ளார்.

உ.பி அரசு உத்தரவால் சர்ச்சை: உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதமான ஜூலை - ஆகஸ்டில் கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு உணவகங்களும் அல்லது தள்ளுவண்டி உணவுக்கடைகள் உட்பட தங்கள் உரிமையாளரின் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும். கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் வண்டிகள், கடைகளில் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும் உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகம் மற்றும் நமது பொதுவான பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும். சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றமாகும். இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

“உ.பி அரசின் இந்த உத்தரவு முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை, பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

x